jaipurj@sltnet.lk (+94) 21 – 2222574 05,Old Park Road, Jaffna, Sri Lanka

இந்தியாவின் ஜெய்ப்பூர் நவீன செயற்கைக்கால் பொருத்தும் திட்டம் மற்றும் புனரமைக்கப்பட்ட கட்டிடத் திறப்பு விழா!

யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையம் (JJCDR) கடந்த நாற்பது ஆண்டுகளாக செயற்கைக் கால்களைப் பொருத்தி உதவுவதன் மூலமும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு சேவைகள் வாயிலாகவும் தனது பணிகளை திறம்பட முன்னெடுத்து வருகிறது.

இந்நிறுவனம் தனது சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இவ்வாண்டு புதிய செயற்றிட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்த சேவைகளுக்கு மேலதிகமாக, இந்தியாவின் ஜெய்ப்பூர் செயற்கைக் கால் பொருத்தும் நவீன முறையை யாழ்ப்பாணத்திலேயே அறிமுகப்படுத்தி, பயனாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கும் திட்டம் இவ்வாண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இச்செயற்றிட்டம், ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (IMHO UK), அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் IMHO USA மற்றும் London School of Commerce நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு டிம் அண்ட்ராடி (Tim Andradi) அவர்களின் பெருந்தாராள நிதியுதவி மற்றும் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படுவது சிறப்பம்சமாகும்.

இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் நோக்கில், சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (IMHO UK) முழுமையான நிதி, திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை வழங்கி, கட்டிடத்தின் முழுமையான புனரமைப்பு, இந்தியாவிலிருந்து நவீன செயற்கைக் கால் தயாரிப்பு இயந்திரங்கள் மற்றும் தேவையான மூலப்பொருட்களின் இறக்குமதி, தொழில்நுட்ப அமைப்புகளின் நிறுவல், மற்றும் இந்திய நிபுணர்கள் மூலமான பயிற்சி ஏற்பாடுகள் ஆகிய அனைத்தையும் முன்னின்று ஒருங்கிணைத்து, இத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது. இதன் மூலம், யாழ்ப்பாணத்தில் தரமான செயற்கைக் கால் உற்பத்தி மற்றும் பொருத்துதல் சேவை புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

செம்மையாகப் புனரமைக்கப்பட்ட கட்டிடத்தில், இந்தியாவின் பகவான் மஹாவீர் விகலாங் சஹாயதா சமித்தி (BMVSS) அமைப்பின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன், சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (IMHO UK) இறக்குமதி செய்து வழங்கிய நவீன இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, இந்தியாவின் ஜெய்ப்பூர் முறையிலான செயற்கைக் கால்கள் தயாரிக்கப்படுகின்றன.

புனரமைப்புச் செய்யப்பட்ட கட்டிடத்தின் மீள்திறப்பு விழாவும், புதிய செயற்கைக் கால் தயாரிப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வும் எதிர்வரும் ஆனி மாதம் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு, இலக்கம் 19/3, கொழும்புத்துறை வீதி, சுண்டிக்குளியில் அமைந்துள்ள நிறுவன அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் நிறுவனத்தின் முகாமைத்துவ சபைத் தலைவர் திருமதி கோசலை மதன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா. வேதநாயகன் அவர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீமான் சாய் முரளி அவர்கள், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர்கள், வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், மதகுருமார்கள், அரச, தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், வர்த்தகப் பிரமுகர்கள், சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதிகள், ஆலோசனை சபை உறுப்பினர்கள், நிறுவனத்தின் பங்குடைமை அமைப்புகளின் பிரதிநிதிகள், வங்கிப் பிரதிநிதிகள், நன்கொடையாளர்கள், நலன் விரும்பிகள், முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், நிர்வாக உத்தியோகத்தர், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

Comments are closed.